13/01/2024, சனிக் கிழமை, ஸ்கந்த கிரி முகாம்.
இன்று மாலை தரிசனம் தந்த சமயம், ஆச்சாரியாள் எப்படி வெள்ளம் போன்று குவிந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தருவார்களா என்ற சந்தேகம். வரிசையில் வரும் பக்தர்கள், தனியாக நிற்கும் பக்தர்கள், ஆங்காங்கே நிற்கும் பக்தர்கள் என்று நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போது , an Island of devotees என்று விவரிக்கத் தோன்றியது.
தனது குழந்தைகளுக்கு கல்யாணம் ஆக வில்லையே என்ற வருத்தம் பலர் முகத்தில் தெரிந்தது. ஒரு சிலர் தன் குழந்தைகளுக்கு உடல் நலம் குறைவாக இருப்பதைப் பார்த்து வருத்தப் பட்டு, வேண்டி நின்றார்கள். ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை செல்வங்களுக்கு பேச்சு வரவில்லையே என்று கண்ணீர் வடித்தார்கள். நினைவிற்கு வந்தது அவ்வையின் வரிகள்:
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
ராம கிருஷ்ணர், ரமணர் போன்றோர் ஆத்ம அனுபூதி பெற்று, அதில் திளைத்து இருந்தாலும், அவர்கள் தங்கள் கர்மவினை என்று கருதி, உடல் சம்பந்தப் பட்ட நோய்களை எதிற்கொண்டாட்கள். நாம்.அனைவரும் சாதாரண மனிதர்கள். நம் உடல், மனம், வாக்கு நம்.கையில் இல்லை. கடலில் மிதக்கும் பந்து, அலைகளால் அங்கும் இங்கும் விரட்டி அடிப்பது போல், நமது வாழ்வு ,சம்சார சாகரத்தில் பந்தாடப் படுகிறது.
ஆதி சங்கரர் நமக்கு காட்டிய 40 படிகளை நம்மால் ஏறி செல்ல முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத கடவுள், குரு வடிவமாக இருப்பதையும் நம்மால் அறிய, உணர முடிவதில்லை. நாம்.அனைவரும் குருவருள்,திருவருள் நாடி நிற்போம். அதுவே உகந்த வழி.